2 கோடி சந்தாதாரர்கள்..! பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் சாதனை..!
|பிரதமர் மோடியின் யூடியூப் சேனலுக்கு அடுத்தப்படியாக, பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் யூடியூப் சேனல் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் இன்று 2 கோடி சந்தாதாரர்களை கடந்தது. இதன்மூலம், உலகத் தலைவர்களின் சேனல்களில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனல் என்ற சாதனை படைத்துள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் 4.5 பில்லியன் பார்வைகளை கொண்டுள்ளன.
பிரதமர் மோடியின் யூடியூப் சேனலுக்கு அடுத்தப்படியாக, பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் யூடியூப் சேனல் இரண்டாவது இடத்தில் உள்ளது. அவரது யூடியூப் சேனல் மொத்தம் 64 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சேனல் 7.89 லட்சம் சந்தாதாரர்களையும், துருக்கி அதிபர் எர்டோகனின் சேனல் 3.16 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன. பிரதமர் மோடியுடன் தொடர்புடைய 'யோகா வித் மோடி' என்ற யூடியூப் சேனல், 73,000 சந்தாரர்களை பெற்றுள்ளது.
இந்திய தலைவர்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சேனலுக்கு 35 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 2007 அக்டோபரில் அவர் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.