< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி தங்கிய ஓட்டலுக்கு ரூ.80 லட்சம் கட்டணம் பாக்கி: 1-ந்தேதிக்குள் செலுத்த நிர்வாகம் கெடு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தங்கிய ஓட்டலுக்கு ரூ.80 லட்சம் கட்டணம் பாக்கி: 1-ந்தேதிக்குள் செலுத்த நிர்வாகம் 'கெடு'

தினத்தந்தி
|
26 May 2024 3:00 AM IST

பிரதமர் மோடி, வனத்துறை அதிகாரிகள், பாதுகாவலர்கள் மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியதற்கான கட்டண தொகை ரூ.80 லட்சம் ஆகும்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. தேசிய புலிகள் காப்பகமான இங்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பந்திப்பூா் தேசிய புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் செய்திருந்தது. பொன்விழாவில் பங்கேற்றதுடன், பந்திப்பூர் வனப்பகுதியில் சபாரி சென்று வனவிலங்குகளை பார்த்து ரசித்தார். மேலும் வனவிலங்குகள், பறவைகளை தனது கேமராவில் படம் பிடித்தார்.

இதற்காக பிரதமர் மோடி, மைசூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அவர் மட்டுமின்றி அவருடன் வந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் அந்த ஓட்டலில் தங்கியிருந்தனர்.

பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பக பொன்விழா கொண்டாட்ட திட்டத்திற்கான செலவு ரூ.6 கோடி ஆகும். முதலில் இந்த நிகழ்ச்சிக்கான தொகை ரூ.3 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கூடுதல் நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டதால் செலவு தொகை ரூ.6.33 கோடியாக மாற்றப்பட்டது. இதில் ரூ.3 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதமர் மோடி, வனத்துறை அதிகாரிகள், பாதுகாவலர்கள் மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியதற்கான கட்டண தொகை ரூ.80 லட்சம் ஆகும். ஆனால் ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை ஓட்டலில் தங்கியதற்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிகிறது.

இதுதொடர்பாக ஓட்டல் நிர்வாகம் கடந்த 21-ந்தேதி கட்டண தொகை ரூ.80 லட்சத்தை 18 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று கர்நாடக வனத்துறைக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து கர்நாடக வனத்துறை, தேசிய புலிகள் காப்பகத்துக்கு இதுபற்றி கடிதம் அனுப்பியது.

தேசிய புலிகள் காப்பக அதிகாரிகள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு ஓட்டலில் தங்கியதற்கான கட்டண பாக்கி தொடர்பாக கடிதம் அனுப்பியது. இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பக பொன்விழா திட்ட செலவு ரூ.6.33 கோடி ஆனதாகவும், அதில் ரூ.3 கோடியை செலுத்திவிட்டதாகவும், மீதி ரூ.3.33 கோடி மட்டும் செலுத்த வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தது.

அத்துடன் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகள் ஓட்டலில் தங்கியதற்கான செலவுகளை மாநில அரசு தான் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கர்நாடக அரசு தான் ஓட்டலுக்கான தொகையை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை கர்நாடக அரசு ஓட்டலுக்கான பாக்கி தொகையை செலுத்தவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் மைசூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் நிர்வாகம், கர்நாடக வனத்துறைக்கு நினைவூட்டல் கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில், எங்கள் ஓட்டலில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் சலுகைகளை பயன்படுத்தியதற்காக கட்டணம் ரூ.80 லட்சம் செலுத்த வேண்டும். ஓராண்டாக அந்த கட்டண பாக்கியை செலுத்தாமல் இருப்பதால், 18 சதவீத வட்டியுடன் ரூ.94 லட்சத்து 40 ஆயிரம் செலுத்த வேண்டும். வருகிற 1-ந்தேதிக்குள் இந்த தொகையை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கையை விரித்துவிட்டதால், கர்நாடக வனத்துறை செய்வதறியாது திகைத்து போய் உள்ளது. அத்துடன் இது கர்நாடக அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தங்கிய பிரபல நட்சத்திர ஓட்டலின் கட்டண பாக்கி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்