மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
|பிரகதி டிஜிட்டல் திட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
புதுடெல்லி,
திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை நோக்கமாக கொண்ட பிரகதி டிஜிட்டல் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் திட்ட செயல்பாடுகளை பிரதமர் மோடி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
அந்தவகையில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ரூ.1.21 லட்சம் கோடி மதிப்பிலான 12 திட்டங்களை நேற்று அவர் டெல்லியில் ஆய்வு செய்தார். இதில் தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களில் நடந்து வரும் திட்டங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன.
தமிழகத்தை பொறுத்தவரை, மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை திட்டப்பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இதைப்போல ராஜ்கோட், ஜம்மு, அவந்திப்போரா, பிபிநகர், ரெவாரி, தர்பங்கா போன்ற இடங்களில் அமையும் எய்ம்ஸ் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
அப்போது, மேற்படி திட்டங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், காலக்கெடு நிர்ணயித்து அவற்றை முடிக்கவும் சம்பந்தப்பட்ட துறையினரை அவர் கேட்டுக்கொண்டார்.