ஜி-20 மாநாடு முடிந்து விட்டதால் உள்நாட்டு பிரச்சினைகளில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே
|ஜி-20 மாநாடு முடிந்து விட்டதால் மோடி அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், ஆனால் இந்த உண்மைகளை மறைக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
விலைவாசி உயர்வு
தற்போது ஜி-20 உச்சி மாநாடு முடிந்து விட்டது. இனியாவது மோடி அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
விலைவாசியை பொறுத்தவரை கடந்த மாதம் 24 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. வேலையில்லா திண்டாட்ட விகிதம் 8 சதவீதமாக உள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் இருண்டுவிட்டது.
மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் கீழ் ஊழல் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல அறிக்கைகள் மூலம் பா.ஜனதாவை சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.13 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. இதை அம்பலப்படுத்தியதற்காக தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் துன்புறுத்தப்படுத்தப்பட்டு உள்ளார்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை
பிரதமரின் நெருங்கிய நண்பர் அடித்துள்ள கொள்ளை சமீபத்தில் மீண்டும் அம்பலமாகி இருக்கிறது. 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் இருந்து ரூ.3 லட்சம் கோடியை அரசுக்கு மாற்ற வேண்டும் என்ற அரசின் அழுத்தத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா எதிர்த்தது தற்போது தெரியவந்துள்ளது.
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் தொடங்கி உள்ளன. இமாசல பிரதேசத்தின் இயற்கை பேரழிவை தேசிய பேரழிவாக அறிவிக்காமல் மோடி அரசு ஆணவத்துடன் உள்ளது.
வெளியேறும் பாதை
இந்த உண்மைகளை மறைக்க மத்திய அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது. ஆனால் மோடி அரசின் திசை திருப்பும் நிகழ்வுகளில் கவனத்தை செலுத்தாமல் இந்த உண்மைகளை அறிய மக்கள் விரும்புகின்றனர்.
எனவே மோடி அரசு கவனமாகக் கேட்க வேண்டும். 2024-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியில் இருந்து நீங்கள் வெளியேறுவதற்கான பாதையை பொதுமக்கள் அமைக்கத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.