< Back
தேசிய செய்திகள்
யோகா தினத்தன்று ஒவ்வொருவரும் யோகா செய்ய ஏற்பாடு செய்யுங்கள் - பிரதமர் மோடி

Image Courtacy: PTI 

தேசிய செய்திகள்

''யோகா தினத்தன்று ஒவ்வொருவரும் யோகா செய்ய ஏற்பாடு செய்யுங்கள்'' - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
13 Jun 2022 4:33 AM IST

சர்வதேச யோகா தினத்தன்று கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் யோகா செய்ய வைக்குமாறு கிராம ஊராட்சி தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 8 ஆண்டுகளில் உங்கள் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அதுபோல், உங்கள் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது.

வருகிற 21-ந் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அதை சிறப்பான நிகழ்வாக மாற்ற நீங்கள் பாடுபட வேண்டும். உங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் யோகா செய்ய வையுங்கள். அந்த புகைப்படத்தை பகிர்ந்து மற்றவர்களுக்கும் உத்வேகம் ஏற்படுத்துங்கள்.

உங்கள் கிராமத்தில் உள்ள பழமையான அல்லது சுற்றுலா தலமான அல்லது நீர்நிலையை ஒட்டிய பகுதியை ேதர்ந்தெடுத்து யோகா நிகழ்ச்சியை நடத்துங்கள். முந்தைய ஆண்டுகளில் உலகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் யோகா செய்து அதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டது, இந்தியர்களை பெருமைப்பட வைத்தது.

உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை கொரோனா நமக்கு உணர்த்தியது. உடல் ஆரோக்கியத்தில் யோகா எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மக்களை உணர செய்துள்ளது.

ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பது முக்கியம். அதனால், மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, 75-வது சுதந்திர தினத்தையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 குளங்களை வெட்ட உறுதி பூண்டுள்ளோம்.

உங்கள் கிராமங்களில், தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளியும் அரசு நலத்திட்டங்களின் பலன்களை முழுமையாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் விடுபட்டு போகக்கூடாது. கிராமம் செழிப்படைந்தால், நாடும் செழிப்படையும்.

கிராம சுயராஜ்யத்தை நோக்கிய பயணத்திலும், ஊராட்சிகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துங்கள்.

சமீபத்தில், 'ஆஷா' சுகாதார பணியாளர்களை உலக சுகாதார அமைப்பு பாராட்டியது, கிராமங்களுக்கு பெருமை அளிக்கக்கூடியது" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்