ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
|ஜெர்மனியில் நடந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, இந்திய கலைநயத்தை உணர்த்தும் விதமாக தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்து அசத்தினார்.
புதுடெல்லி,
ஜி-7 மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில்முதலீடு செய்ய வருமாறு ஜி-7 நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான், இத்தாலி ஆகிய 7 பணக்கார நாடுகள் இணைந்த ஜி-7 அமைப்பின் 3 நாள் மாநாடு, கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
ஜெர்மனியின் எல்மாவ் நகரில் இம்மாநாடு தொடங்கியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் அழைப்பின்பேரில், பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனிக்கு சென்றார். நேற்று முன்தினம் முனிச் நகரை அடைந்த அவர், அங்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
2-ம் நாளான நேற்று, பிரதமர் மோடி மாநாடு நடக்கும் சொகுசு விடுதிக்கு சென்றார். அவரை ஒலாப் ஸ்கால்ஸ், விடுதி வாசலில் கைகுலுக்கி வரவேற்றார். மாநாட்டில், 'பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம்' ஆகியவை தொடர்பான அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்தநிலையில், ஜெர்மனியில் நடந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, இந்திய கலைநயத்தை உணர்த்தும் விதமாக தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்து அசத்தினார்.
ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோவுக்கு உத்தர பிரதேச மாநிலம் மாநிலம் நிசாமாபாத்தில் செய்யப்பட்ட கருப்பு மண்பாண்ட பண்டங்களை பரிசாக வழங்கினார்.
தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசாவிற்கு, சத்தீஸ்கர் மாநிலத்தின், ராமாயணத்தை மைய பொருளாக கொண்ட டோக்ரா கலை பொருட்களை, பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு , உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தயாரிக்கப்பட்ட குலாபி மீனாகரி புரூச் மற்றும் கப்லிங் செட்களை, பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, உத்தர பிரதேச மாநிலம் புலாந்ஷரில் தயாரிக்கப்பட்ட பிளாட்டினமால் வர்ணம் தீட்டப்பட்ட தேநீர் கப்களை, பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு, ஒரு லிட்டர் அளவிலான பாட்டீல்கள் கொண்ட ஜர்தோசி பெட்டியை பரிசளித்தார். இது லக்னோவில் தயாரிக்கப்பட்டது.
இத்தாலி பிரதமர் மாரியே ரகிக்கு, ஆக்ராவில் தயாரிக்கப்பட்ட மார்பிள் இன்லே டேபிள் டாப்-பை பரிசாக பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
ஜெர்மன் சான்சிலர் ஓலப் ஸ்கால்ஜ்க்கு, உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் தயாரிக்கப்பட்ட கலைநயத்துடன் கூடிய வெண்கல குவளையை பிரதமர் மோடி பரிசளித்தார்.
செனகல் அதிபர் மக்கி சல்லுக்கு உத்தர பிரதேச மாநிலம் சித்தப்பூரில் தயாரிக்கப்பட்ட கோரைப்புல்லால் செய்யப்பட்ட கூடைகள் மற்றும் பருத்தி துணிகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.
இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோவுக்கு அரக்கில் தயாரிக்கப்பட்ட ராமர் தர்பாரை பிரதமர் மோடி பரிசளித்தார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, கைகளால் பின்னப்பட்ட பட்டு கம்பளத்தை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.