< Back
தேசிய செய்திகள்
வெளியானது கருத்துக் கணிப்பு இல்லை.. பிரதமர் மோடியின் கற்பனை: ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

வெளியானது கருத்துக் கணிப்பு இல்லை.. பிரதமர் மோடியின் கற்பனை: ராகுல் காந்தி

தினத்தந்தி
|
2 Jun 2024 2:44 PM IST

நேற்று வெளியானது அனைத்தும் கருத்துக்கணிப்பு அல்ல. பிரதமர் மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்றது. நேற்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது. தொடர் ஓட்டம் போல் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற ஆவல் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள், கருத்துக்கணிப்பில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்தன. நேற்று மாலை 6 மணிக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் பா.ஜனதா 350 இடங்களுக்கு மேல் வரை பெறும் என்றே கூறியிருந்தன.

அதாவது, நியூஸ் எக்ஸ் எடுத்த கருத்துக்கணிப்பில் பா.ஜனதா கூட்டணிக்கு 371 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 175 இடங்களும் மற்றவர்களுக்கு 47 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.ரிபபிளிக் டி.வி. கருத்துக்கணிப்பு பா.ஜனதா கூட்டணி 359 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 154 இடங்களையும், மற்றவர்கள் 30 இடங்களையும் கைப்பற்றுவார்கள் என்கிறது.

என்.டி.டிவி. கருத்துக்கணிப்பில் பா.ஜனதா 371 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 125 இடங்களையும் மற்றவர்கள் 47 இடங்களையும் கைப்பற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது; இது கருத்துக்கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கணிப்பு. அவரது கற்பனை கருத்துக்கணிப்பு. ‛ இந்தியா ' கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்