பிரதமர் மோடி பிறந்த நாள்; 100 சதவீதம் தள்ளுபடி அறிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள்
|பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சூரத் நகரில் உள்ள ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து உள்ளனர்.
சூரத்,
பிரதமர் மோடியின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அவருடைய சொந்த குஜராத் மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளில் கட்சியினர் மற்றும் மக்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதன்படி, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சூரத் நகரில் உள்ள ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக சில சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து உள்ளனர்.
அவர்களில் சிலர் 100 சதவீதம் தள்ளுபடியையும் அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளனர். இதுபற்றி குஜராத் எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி கூறும்போது, பிரதமர் மோடியின் பிறந்த நாளில் ஆயிரம் ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள் 30 சதவீத தள்ளுபடியை அறிவித்து உள்ளனர்.
பிரதமர் மோடியின் 73-வது பிறந்த நாளில் 100 சதவீதம் தள்ளுபடி வழங்கும் 73 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற சலுகைகளை வேறு சில ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்தனர். பிரதமர் மோடியின் ஓராண்டு ஆட்சி நிறைவை முன்னிட்டு, ஒரு நாள் சலுகையாக, 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு ரூபாய் கட்டணத்திற்கு வாடிக்கையாளர்களை சதீஷ் பிரபு என்ற ஆட்டோ ஓட்டுநர் அழைத்து சென்றுள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த சலுகையை 2, 3, 4, 5 என 7 நாட்களுக்கு பின்னர் விரிவுப்படுத்தினார்.