< Back
தேசிய செய்திகள்
PM Modi Meeting to review storm hit North Eastern States
தேசிய செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் புயல் பாதிப்பு - நிலவரத்தை ஆய்வு செய்ய பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம்

தினத்தந்தி
|
2 Jun 2024 10:04 AM GMT

வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்புகளுக்குப் பிறகான நிலவரம் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த மாதம் 25-ந்தேதி புயலாக உருமாறியது. 'ராமெல்' என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து மேற்குவங்காளம் மற்றும் வங்கதேசம் இடையே 26-ந்தேதி இரவு கரையை கடந்தது.

புயலை தொடர்ந்து கனமழை கொட்டியது. இதில் மேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் 'ராமெல்' புயல் காரணமாக மிசோரம், மணிப்பூர், அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்றது.

இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்குப் பிறகு தற்போது அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்