< Back
தேசிய செய்திகள்
தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்திய ஊழல்களுக்கு பிரதமரே பொறுப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

Image Courtacy: PTI

தேசிய செய்திகள்

தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்திய ஊழல்களுக்கு பிரதமரே பொறுப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
17 Aug 2023 5:56 AM IST

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்திய மத்திய அரசின் ஊழல்களுக்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்களில் நடந்த 7 ஊழல்களை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.) அம்பலப்படுத்தி உள்ளார். இந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். யார் மீது தவறு என்று பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

பிரதமர் மோடிதான் இந்த ஊழல்களுக்கு பொறுப்பு என்று தெளிவாக தெரிகிறது. அவர் மீது பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அவரது மூக்குக்கு கீழே ஊழல் நடந்துள்ளது. இப்போதாவது அவர் மவுனம் கலைப்பாரா? ஊழலுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? தணிக்கை அறிக்கையை தயாரித்தவர்களை 'தேச விரோதி' என்று பிரதமர் வர்ணிக்கலாம். அவர்கள் மீது சோதனை நடத்தி, சிறையில் அடைக்கலாம். ஆனால், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது அவசியம்.

பாரத்மாலா திட்டம்

'பாரத்மாலா' திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. சாலை போடுவதற்கு 1 கி.மீ.க்கான கட்டுமான செலவு ரூ.15 கோடியே 37 லட்சத்தில் இருந்து ரூ.32 கோடியாக உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி, டெண்டர் நடைமுறையிலும் குறைபாடு உள்ளது. விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. பாதுகாப்பு ஆலோசகர்கள் நியமிக்கப்படவில்லை. அந்த சாலைகளில் பயணிக்கும்போது ஏதேனும் நடந்தால், அதற்கு அரசு பொறுப்பேற்காது. துவாரகா விரைவுசாலை போடும் திட்டத்தில் கட்டுமான செலவு, 1 கி.மீ.க்கு ரூ.18 கோடியில் இருந்து ரூ.250 கோடியாக அதிகரித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் ஊழல்

மேலும், 5 சுங்கச்சாவடிகளை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தணிக்கை செய்ததில், ரூ.132 கோடி ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. எல்லா சுங்கச்சாவடிகளிலும் தணிக்கை செய்தால் எவ்வளவு நடந்திருக்கும்? 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் 88 ஆயிரம் இறந்த நோயாளிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த பணம் எங்கே போனது என்பது முக்கியமான கேள்வி. அயோத்தி வளர்ச்சி திட்டம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றிலும் ஊழல்கள் நடந்துள்ளன.

சாலை போக்குவரத்து அமைச்சகம், சுகாதார அமைச்சகம் ஆகியவற்றின் மீது பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா? நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, ஏழைகளுக்கான திட்டங்களில் பலனடைய அவர்கள் அனுமதிக்கப்பட்டது எப்படி என்று பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்