எதிர்க்கட்சிகள் கூட்டணியால் பிரதமர் மோடி கவலை - நிதிஷ்குமார் பேட்டி
|எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணி அமைத்ததால் பிரதமர் மோடி கவலைப்படுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நிதிஷ்குமார் கூறினார்.
பாட்னா,
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று டெல்லியில் இருந்து பாட்னா திரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-
நான் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி சென்றேன். அதே சமயத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுநாளும் வந்தது. அதனால், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினேன். அவர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். வாஜ்பாய் ஒருநாள் பிரதமர் ஆவார் என்று கணித்தேன். அது நடந்து விட்டது. அவர் தலைமையிலான கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்று 1999-ம் ஆண்டு பெயர் சூட்டப்பட்டது.
கவலை
நான் அந்த கூட்டணியில் இருந்தபோது, இவர்கள் (பிரதமர் மோடி) தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டுவது பற்றி நினைக்கவே இல்லை. எதிர்க்கட்சிகள் ேசர்ந்து 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்து, ஒன்றிரண்டு கூட்டங்கள் நடத்தியவுடன், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டுகின்றனர். எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி அமைத்ததை பார்த்து மோடி கவலைப்படுகிறார். இந்தியா கூட்டணியை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை என்று மோடி கூறுகிறார். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருக்கும். நல்ல வெற்றி பெறும்.
கார்கே சந்திக்க மறுப்பா?
நான் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்திக்க நேரம் ேகட்டதாகவும், அவர்கள் மறுத்து விட்டதாகவும் வதந்தி பரப்பப்படுகிறது. அந்த தலைவர்களுடன் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.
எனது டெல்லி பயணத்தில் தலைவர்களை சந்தித்கும் திட்டமே இல்ைல. கண் பரிசோதனைக்காக மட்டுமே நான் ெசன்றேன். இப்படி யூகங்கள் எழுவது ஆச்சரியமாக இருக்கிறது.
மற்ற மாநிலங்களை விட பீகாரில் குற்றங்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சட்டம்-ஒழுங்கு பற்றி பேசுபவர்கள், இதை கவனிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.