பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 27, 28 ஆகிய தேதிகளில் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி
|பிரதமர் மோடி வருகிற 27, 28-ந் தேதிகளில் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28-ந் தேதிகளில் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது அவர் ராஜ்கோட்டில் புதிதாக கட்டப்பட்ட கிரீன்பீல்ட் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்த விமான நிலையத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் 27-ந்தேதி அதை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
முன்னதாக அவர் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து காந்திநகர் விருந்தினர் மாளிகையில் முதல்-மந்திரி பூபேந்திர படேல் உள்ளிட்ட மாநில மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 28-ந்தேதி காந்திநகரில் 'செமிகான் இந்தியா 2023' உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதற்கான கண்காட்சி நாளை தொடங்குகிறது. வருகிற 30-ந்தேதி வரை இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், ஜெய்சங்கர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.