குஜராத்: ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி
|குஜராத்தின் ஆமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டியில் நடந்த ரோபோ கண்காட்சியை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.
ஆமதாபாத்,
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அவர் ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தொழில் கூட்டமைப்புகள், வர்த்தக பிரிவை சேர்ந்த பிரபல நபர்கள், இளம் தொழில்முனைவோர்கள் மற்றும் உயர்நிலை மற்றும் தொழில்நுட்ப கல்வி கல்லூரிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடி துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாட்டையும் தொடக்கி வைத்துள்ளார்.
குஜராத்தில், 22 மாவட்டங்களில் கிராமப்புற வைபை வசதிகள் உள்பட ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அவர் சோட்டா உதேப்பூரில் தொடக்கி வைக்க உள்ளார். இந்த வைபை வசதிகளால் 7,500 கிராமங்களை சேர்ந்த 20 லட்சம் பேர் பயனடைவார்கள்.
இதேபோன்று, திறன் திட்டங்களுக்கான பள்ளிகள் இயக்கத்தின் கீழ், ரூ.4,505 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.