மகளிர் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தாருங்கள் - எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
|மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
புதுடெல்லி,
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி தனது முதல் உரையை ஆற்றினார். அவர் பேசியதாவது:-
புதிய நாடாளுமன்றம், 140 கோடி இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. புதிய அத்தியாயத்தை நாம் தொடங்குகிறோம். கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து விடுவோம். புதிய கட்டிடத்தில் நீங்கள் முன்வைக்கும் கருத்துகள், அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக பல ஆண்டுகளாக விவாதம் நடந்து வருகிறது. கடந்த 1996-ம் ஆண்டு முதல்முறையாக இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
கடவுள் தேர்வு செய்தார்
வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலும் இம்மசோதாவை நிறைவேற்ற பலதடவை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், போதிய ஆதரவு இல்லாததால், நிறைவேற்ற முடியவில்லை. கனவு நனவாகாமலே இருந்தது.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அந்த பணிக்கு கடவுள் என்னை தேர்வு செய்துள்ளார். எங்கள் அரசு இதற்காக நடவடிக்கை எடுத்தது. மத்திய மந்திரிசபை கூட்டத்தில், அம்மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அந்தவகையில், செப்டம்பர் 19-ந் தேதி, வரலாற்றில் பொறிக்கப்பட இருக்கிறது.
ஒருமனதாக நிறைவேற்றுங்கள்
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னேறி வரும் நிலையில், கொள்கை முடிவு எடுப்பதிலும் அவர்களுக்கு அதிகபட்ச பங்கு இருக்க வேண்டும். பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்தை முன்னெடுத்து செல்வதற்காக, அரசியல் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்கிறோம். இதனால் ஜனநாயகம் வலுப்படும்.
இம்மசோதாவை சட்டமாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று தாய்மார்களுக்கும், மகள்களுக்கும் உறுதி அளிக்கிறேன். மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு இரு அவை உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் பேசினார்.
மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பேசினார். அங்கும் மகளிர் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார்.