பிரதமர் மோடி 10ம் தேதி வயநாடு பயணம்
|நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் தொடர்ந்து 10வது நாளாக மீட்பு பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, அட்டமலை, வெள்ளரிமலை, புஞ்சிரிமட்டம் ஆகிய மலைக்கிராமங்களை கடந்த மாதம் 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு புரட்டிப்போட்டது. மண்ணில் புதைந்தவர்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 408 பேர் உயிரிழந்து உள்ளனர். 152 பேரை காணவில்லை. இதில் 138 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளனது. மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வயநாட்டில் தொடர்ந்து 10வது நாளாக இன்று மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டை நேரில் ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) வயநாடு செல்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் அவர், கேரளா மாநிலம் கண்ணூர் விமான நிலையம் செல்கிறார். கண்ணூரில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் ஆகியோருடன் இணைந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டை பார்வையிடுகிறார்.
பின்னர் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்கள் சிலருடன் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து வயநாடு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மாநில எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி நேரில் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.