< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி குஜராத்தில் சுற்றுப்பயணம் - உலகளாவிய வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி குஜராத்தில் சுற்றுப்பயணம் - உலகளாவிய வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்

தினத்தந்தி
|
9 Jan 2024 1:02 PM IST

காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நாளை காலை துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு தொடங்க உள்ளது.

காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு அகமதாபாத் வந்தடைந்த பிரதமர் மோடியை, கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல், மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் வரவேற்றனர்.

இன்று காலை காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திருக்கு வந்த பிரதமர், அங்கு திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். அதன்பின்னர், பிற்பகல் 3 மணியளவில், துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

திமோர் லெஸ்டே அதிபருடன் மோடி சந்திப்பு

திமோர் லெஸ்டே அதிபருடன் மோடி சந்திப்பு

முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 9:45 மணியளவில், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர், முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்..

பின்னர் கிஃப்ட் சிட்டி செல்லும் பிரதமர், மாலை 5.15 மணியளவில் உலகளாவிய தலைமைத்துவ மன்றத்தில் முக்கிய வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10வது உலகளாவிய உச்சிமாநாடு நாளை தொடங்கி மூன்று நாட்கள் (12-ம் தேதி வரை) காந்திநகரில் நடைபெறுகிறது. இதன் கருப்பொருள் 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்பதாகும். இந்த பத்தாவது உச்சிமாநாடு "20 ஆண்டுகால துடிப்பான குஜராத்தை வெற்றியின் உச்சிமாநாடாக" கொண்டாடும்.

இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்க உள்ளன. மேலும், வடகிழக்கு பிராந்தியங்களில் முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வதற்கு, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் துடிப்பான குஜராத் தளத்தைப் பயன்படுத்தும்.

தொழில்துறை 4.0, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், நிலையான உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், மின்சார இயக்கம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலைத்தன்மையை நோக்கிய மாற்றம் போன்ற உலகளாவிய தொடர்புடைய தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியில், உலகத் தரம் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை நிறுவனங்கள் காட்சிப்படுத்துகின்றன. இ-மொபிலிட்டி, ஸ்டார்ட் அப்கள், எம்.எஸ்.எம்.இ.க்கள், நீல பொருளாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் ஸ்மார்ட் உள்கட்டமைப்பு ஆகியவை வர்த்தக கண்காட்சியில் கவனம் செலுத்தும் துறைகளாகும்.

மேலும் செய்திகள்