< Back
தேசிய செய்திகள்
71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் வேலை: பணி நியமன உத்தரவுகளை நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் வேலை: பணி நியமன உத்தரவுகளை நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
12 April 2023 12:19 AM GMT

ஒரேநேரத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்கப்படுகிறது. இதற்கான பணி நியமன உத்தரவுகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்து நிறைவேற்றி வருகிறார்.

இந்த திட்டத்தைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

'ரோஜ்கார்' என்று அழைக்கப்படுகிற இந்த திட்டம், இளைய தலைமுறையினரிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசில் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

71 ஆயிரம் பேருக்கு வேலை

பிரதமர் மோடி, நாளை (13-ந்தேதி) காணொலிக்காட்சி வழியாக நடைபெறுகிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்குகிறார்.

ரெயில் மேலாளர், ரெயில் நிலைய அதிகாரி, சீனியர் வணிகவியல் மற்றும் டிக்கெட் கிளார்க், ஆய்வாளர், உதவி இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள், அஞ்சல் உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், வரி உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், செவிலியர்கள், நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

புதிதாக பணி நியமனம் செய்யப்படுகிறவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகிறார்.

பயிற்சி

மேலும், புதிதாக பணி நியமனம் செய்யப்படுகிறவர்கள், 'கர்மயோகி பிரராம்ப்' என்கிற ஆன்லைன் பயிற்சியின் மூலம் பயிற்சி பெற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சியில் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள், மனித வள கொள்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்