மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார் - அமித்ஷா உறுதி
|அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கு மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அமித்ஷா கூறினார்.
கவுகாத்தி,
அருணாசலபிரதேசம் சென்றிருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அங்கிருந்து அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு திப்ருகரில், பா.ஜனதா அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள், காங்கிரசின் கோட்டையாக இருந்தன. ஆனால், சமீபத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை சென்றபோதிலும், 3 வடகிழக்கு மாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
பா.ஜனதா வளரும்
ராகுல்காந்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தினார். அவர் தொடர்ந்து இதேபோல் பொய்களால் இந்தியாவையும், அரசையும் இழிவுபடுத்தினால், வடகிழக்கு மாநிலங்களில் துடைத்து எறியப்பட்டதுபோல், நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் விரட்டி அடிக்கப்பட்டு விடும்.
அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் மோடியை மோசமாக விமர்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு பா.ஜனதா வளரும்.
மோடி பிரதமர்
அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 300-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆவார்.
முன்பெல்லாம் அசாம் என்றாலே போராட்டம், பயங்கரவாதம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது அமைதி தவழ்கிறது. அதனால், மக்கள் இசைக்கேற்ப நடனம் ஆடுகிறார்கள்.
அசாம் மாநிலத்தின் 70 சதவீத பகுதிகளில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அண்டைமாநிலங்களுடனான எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது என்று அவர் பேசினார்.