< Back
தேசிய செய்திகள்
மீண்டும் கேரளாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடி: சுரேஷ் கோபியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்..!
தேசிய செய்திகள்

மீண்டும் கேரளாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடி: சுரேஷ் கோபியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்..!

தினத்தந்தி
|
11 Jan 2024 6:17 AM IST

இதையொட்டி கொச்சி மற்றும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கொச்சி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ந் தேதிகளில் தமிழகம், லட்சத்தீவு மற்றும் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக மீண்டும் கேரளாவுக்கு வருகை தர உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 16-ந் தேதி எர்ணாகுளம் மாவட்டம் கொச்சிக்கு வருகிறார். தொடர்ந்து மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். பின்னர் இரவில் கொச்சியில் ஓய்வெடுக்கிறார்.

இதையடுத்து 17-ந் தேதி காலை 8 மணிக்கு திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நடைபெறும் பாஜக பிரமுகரும், நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமண நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்கிறார். தொடர்ந்து குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி கொச்சி மற்றும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பிரதமர் வருகையையொட்டி கோவிலில் அன்றைய தினம் காலை 6 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பிரதமர் மோடி வழிபாடு நடத்தி விட்டு சென்ற பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கேரளாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கொச்சியில் இருந்து டெல்லி திரும்புகிறார்.

மேலும் செய்திகள்