< Back
தேசிய செய்திகள்
காங்கோவில் இந்திய வீரர்கள் பலி; விசாரணையை தீவிரபடுத்த ஐ.நா. பொதுச்செயலாளரிடம் இந்திய பிரதமர் வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

காங்கோவில் இந்திய வீரர்கள் பலி; விசாரணையை தீவிரபடுத்த ஐ.நா. பொதுச்செயலாளரிடம் இந்திய பிரதமர் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
30 July 2022 9:34 AM IST

காங்கோவில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றி வந்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

புதுடெல்லி,

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சியாளர் குழுக்களும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் அந்நாட்டு மக்கள், அரசு படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, காங்கோவில் அமைதியை நிலைநாட்டவும், அரசுப்படைகளுக்கு ஆதரவாகவும் ஐ.நா.வின் அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த அமைதிப்படையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், ஐ.நா. அமைதிப்படைகள், உள்நாட்டு படைகள் இருந்தபோதும் காங்கோவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் கடந்த 26-ம் தேதி அந்நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள புடிம்போ நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிப்படை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

அலுவலகத்திற்கு நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அமைதிப்படை வீரர்களையும் கடுமையாக தாக்கினர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கியை பறித்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த வன்முறையின் போது ஐநா அமைதிபடை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 வீரர்களில் 2 பேர் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஷிஷுபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷொனி ஆகிய 2 வீரர்கள் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்திற்கு இந்தியா, ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசை இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, காங்கோவில் ஐ.நா. அமைதிப்படையில் பணிபுரிந்து வந்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ பிரதமர் மோடியிடம் வருத்தம் தெரிவித்தார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களிடமும், பிரதமரிடமும் ஆன்டனியோ வருத்தம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான மற்றும் வேகமான விசாரணை நடத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டுமென ஐ.நா. பொதுச்செயலாளரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்