இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
|இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரால் அப்பாவி மக்கள் பலியாவது குறித்தும் இருதலைவர்களும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.
புதுடெல்லி,
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இங்கிலாந்து பிரதமராக ;பொறுப்பேற்று ரிஷி சுனக் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் அதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். குறிப்பாக மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதல் குறித்தும் பேசிய தலைவர்கள், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினர்.
மேலும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரால் அப்பாவி மக்கள் பலியாவது குறித்தும் இருதலைவர்களும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.
பிரதமர் மோடி இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பேசினேன். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம்.
மேற்கு ஆசியாவில் உள்ள நிலமை குறித்து எங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். அப்பாவி மக்கள் உயிர் பறிபோவது மிகுந்த கவலைக்குரிய ஒன்றாகும். பிரந்திய அமைதி மற்ற்றும் நிலைத்தன்மை, பாதுகாப்பு தொடர்பாக பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் பேசினோம்" என்று பதிவிட்டுள்ளார்.