மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!
|அகிலேஷ் யாதவிடம் பேசிய பிரதமர் மோடி, முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
புதுடெல்லி,
சமாஜ்வாதி கட்சி நிறுவனரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியான முலாயம் சிங் யாதவின்(82) உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் முலாயம் சிங் சிகிச்சை பெற்று வந்தார். இச்சூழ்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவரும் முலாயம் சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவிடம் பேசிய பிரதமர் மோடி, முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். முலாயம் சிங் யாதவ் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும், சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தாயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.