கோவாவில் 2-வது விமான நிலையத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
|கோவாவில் இன்று 2-வது விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் நிலையில், நாட்டில் இயங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்திருக்கிறது.
கோவாவின் 2-வது விமான நிலையம்
கோவாவின் ஒரே விமான நிலையம் தபோலிமில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு 2-வதாக மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கிவைக்கிறார்.
ரூ.2 ஆயிரத்து 870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில், இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் ஆகியவை புதிதாக அமைகின்றன. மேலும் கோவாவில் விமான பயணிகளை கையாளும் திறன் ஒரு கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும்.
இரு மடங்காக உயர்வு
கோவாவில் மோபா சர்வதேச விமான நிலையத்துடன், நாட்டில் இயங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றபோது 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது இரு மடங்காகி உள்ளது.
அதற்கு, வான்வழித் தொடர்பை அதிகரிப்பதற்கும், புதிய விமான நிலையங்களை தொடங்குவதற்கும் பிரதமர் மோடி காட்டும் ஆர்வம்தான் காரணம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இடாநகர் விமான நிலையம்
அருணாசலபிரதேசத்தில் நவம்பர் மாதம் இடாநகர் விமான நிலையத்தையும், ஜூலையில் ஜார்கண்டில் தியோகர் விமான நிலையத்தையும், கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரபிரதேசத்தில் புகழ்பெற்ற புத்த தலமான குஷிநகரில் சர்வதேச விமான நிலையத்தையும் மோடி திறந்துவைத்ததையும், கடந்த ஆண்டு நவம்பரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டியதையும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
5 ஆண்டுகளில் 220 விமான நிலையங்கள்
நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 220 விமான நிலையங்களை மேம்படுத்தவும், இயக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.