< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியை ரிமோட் மூலம் அதானி இயக்குகிறார் - ராகுல்காந்தி
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை 'ரிமோட்' மூலம் அதானி இயக்குகிறார் - ராகுல்காந்தி

தினத்தந்தி
|
11 Oct 2023 12:47 AM IST

பிரதமர் மோடியை கவுதம் அதானி ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்குகிறார் என்று ராகுல்காந்தி கூறினார்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் என்று நேற்று முன்தினம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மத்தியபிரதேசத்தில் ஷாடோல் மாவட்டம் பியோஹரி என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாட்டில் தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை அறிந்து கொள்வது அவசியம். உடலில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிய எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.

ரிமோட் கண்ட்ரோல்

அதுபோல், சாதிவாரி கணக்கெடுப்பு, எக்ஸ்ரே போன்றது. அதன்மூலம், மேற்கண்ட சாதியினரின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம். எனவே, என்ன ஆனாலும் சரி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நிலைக்கு மத்திய அரசை தள்ளுவோம். இந்த கணக்கெடுப்பு நடத்துவது, தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் நிலைமையை வெளிப்படுத்தும்.

ஆனால், பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசாமல் மவுனம் சாதிக்கிறார். பாகிஸ்தான் பற்றியும், ஆப்கானிஸ்தான் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார். அவரை கவுதம் அதானி, 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் இயக்குகிறார்.

40 பேர் கொலை

மத்தியபிரதேசத்தில் தொழிற்கல்வி தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்தன. அந்த ஊழலை மறைப்பதற்காக, 40 பேைர கொடூரமாக கொலை செய்துள்ளனர். மத்தியபிரதேசம்தான், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆய்வுக்கூடம் என்று முன்பு எல்.கே.அத்வானி கூறினார். பா.ஜனதாவுக்கு மட்டுமல்ல, வியாபம் ஊழல், ஆயுஷ்மான் பாரத் திட்ட ஊழல் போன்ற ஊழல்களின் ஆய்வுக்கூடமாகவும் இருக்கிறது.

பெண்களுக்கு தலா ரூ.1,500

நாட்டின் நிலம், நீர், வனம் ஆகியவற்றில் பழங்குடியினருக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்கள் மீது பா.ஜனதாவினர் சிறுநீர் கழிக்கின்றனர்.

மத்தியபிரதேசத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பெண்ணின் வங்கிக்கணக்கிலும் மாதந்தோறும் ரூ.1,500 செலுத்துவோம். ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரியில் உரையாடல்

இதற்கிடையே, கடந்த மாதம், ராஜஸ்தான் மாநில தலைநகர் ெஜய்ப்பூரில் உள்ள மகாராணி கல்லூரியில், மாணவிகளுடன் ராகுல்காந்தி உரையாடிய வீடியோ, நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதிலும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக ராகுல்காந்தி பேசியுள்ளார். மாணவிகளிடம் ராகுல்காந்தி கூறியதாவது:-

நாட்டின் அதிகார கட்டமைப்பில் தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் இல்லை என்பதுதான் உண்மை. நாட்டில் அவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதும் தெரியவில்லை.

100 சதவீதம் ஆதரவு

உடலில் காயம் ஏற்பட்டால், எலும்பு உடைந்துள்ளதா, இல்லையா, எந்த அளவுக்கு உடைந்துள்ளது என்பதை அறிய எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. அதுபோல், ஒவ்வொரு சாதியினரும் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் அறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்