வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவதாக கூறிய பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகள் வருமானம் வீழ்ச்சி - அனைத்திந்திய கிசான் காங்கிரஸ்
|விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவோம் என கூறிய மத்திய பா.ஜ.க. ஆட்சியில், விவசாயிகள் வருமானம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் பிரிவான அனைத்திந்திய கிசான் காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைரா, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரு மடங்காக உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வாக்குறுதி அளித்தார். ஆனால் விலைவாசி உயர்வையும் கணக்கில் கொண்டால், விவசாயிகள் வருமானம் சமீபத்திய ஆண்டுகளில் வீழ்ச்சியைத்தான் சந்தித்து இருக்கிறது.
2004-ம் ஆண்டு தொடங்கி 2014-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின்போது விவசாயிகள் வருமானம் இரு மடங்குக்கு மேலாக அதிகரித்தது.
குறைந்தபட்ச ஆதரவு விலை
விவசாயிகள் வருமானத்தை நிர்ணயிப்பதில் குறைந்தபட்ச ஆதரவு விலைதான் முக்கிய அளவுகோல் ஆகும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளுக்குள் இரு முக்கிய பயிர்களான கோதுமை மற்றும் நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை இரு மடங்காக உயர்த்தியது.
சுதந்திரத்துக்கு பின்னர் பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், வேளாண் கருவிகளுக்கு ஜி.எஸ்.டி. விதித்த முதல் அரசு, மோடி அரசுதான்.
விவசாயிகள் வருமானத்தை 2022-க்குள் இரு மடங்காக உயர்த்துவோம் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில், இதற்காக 2016-ம் ஆண்டு அமைத்த குழுவின் பரிந்துரைகள் என்னாயிற்று?
விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதற்காக 2016-ம் ஆண்டு அமைக்கப்பட்ட விவசாயிகள் வருமான குழு (டிஎப்ஐசி), 2018-ல் தனது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கை இன்னும் அதிகார வர்க்கத்தின் தாழ்வாரத்தில் தூசி தட்டிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.