கார்ல்சனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் மோடி பாராட்டு
|கார்ல்சனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 7 வது சுற்று போட்டியில் உலக சாம்பியன் ஆன மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி எதிர் கொண்டார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கார்த்திகேயன் முரளி அபாரமாக ஆடி வெற்றி பெற்றார். இதன் மூலம் மேக்னஸ் கார்ல்சனை வென்ற 3 வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் கார்த்தியேன் முரளிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் கூறி இருப்பதாவது;
"கார்த்திகேயன் முரளியின் வெற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. நடப்பு செஸ் சாம்பியனும், உலகின் நம்பர் 1 வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அபாரமான சாதனை படைத்துள்ளார். அடுத்த சுற்றிலும் அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள்." இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.