< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய ஜனாதிபதி, பிரதமர்

தினத்தந்தி
|
31 Oct 2023 9:22 AM IST

ஒற்றுமையை வலியுறுத்தும் உலகிலேயே மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலை நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்:

துண்டுபட்டு கிடந்த ராஜ்ஜியங்களை இணைத்த பெருமைக்குரியவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல். அவரது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, மத்திய மந்திரி மீனாட்சி லேகி உள்பட பலர் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தநிலையில் அவரது பிறந்தநாளையொட்டி நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவுள்ளார். ஒற்றுமையை வலியுறுத்தும் உலகிலேயே மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலை நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்