மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
|மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கிய சிறப்புக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது. நாளை முதல் புதிய கட்டிடத்தில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டங்களில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளநிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என பிரதமர் மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.