தீபாவளி பரிசாக 75 ஆயிரம் பேர் பணி நியமனம்: மத்திய அரசில் 10 லட்சம் பேருக்கு வேலை; பிரதமர் மோடி 'மெகா' திட்டத்தை தொடங்கினார்
|10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்கும் ‘மெகா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தீபாவளி பரிசாக 75 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தல்2024-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளதால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இப்போதே அதற்காக முழுவீச்சில் தயாராகத்தொடங்கி உள்ளது.
10 லட்சம் பேருக்கு வேலை
உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்றின் பரவலுக்கு பின்னர், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது, விலைவாசி உயர்ந்து வருகிறது, பணவீக்கம் அதிகரித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் ஓங்கிக்குரல் எழுப்பத் தொடங்கி உள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு, செயல் வடிவத்தில் பதில் அளிக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. அந்த வகையில் முதலில் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகிறது.
18 மாத காலத்தில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்க பிரதமர் மோடி திட்டம் தீட்டி உள்ளார். இதற்கான உத்தரவை அவர் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும், அமைச்சகங்களுக்கும் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து பணி நியமனங்களுக்காக யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரெயில்வே பணியாளர் வாரியம் என மத்திய அரசின் பல்வேறு பணி நியமன தேர்வு அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி தொடங்கினார்
மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும், அமைச்சகங்களிலும் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் 'மெகா' திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.
அதே நேரத்தில் 'ரோஸ்கர் மேளா' என்றழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு தீபாவளி பரிசாக பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. நாடெங்கும் 50-க்கும் மேற்பட்ட மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு இந்த பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்கள்.
பாரம்பரியம் தொடக்கம்
பணி நியமனம் பெற்றவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த நாளில், கடந்த8 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்று வருகிற வேலை வாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு ரோஸ்கர் மேளா வடிவத்தில் ஒரு புதிய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்ததின் 75-வது ஆண்டைக் கொண்டாடுவதை மனதில் கொண்டு, மத்திய அரசு 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவை வழங்கி உள்ளது.
ஒரே நேரத்தில் பணி நியமன உத்தரவுகளை வழங்கும் ஒரு பாரம்பரியம் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இதனால் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கிற கூட்டு மனோபாவம், துறைகளில் உருவாகிறது.
உலகளாவிய சூழல்
இன்றைக்கு உலகளாவிய சூழ்நிலை நன்றாக இல்லை என்பது உண்மை. பெரிய பொருளாதார நாடுகள் பலவும் போராடிக்கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் உச்சத்தில் உளளன.
நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் தொற்று நோயாக கொரோனா வந்து, அதன் பக்கவிளைவுகள் 100 நாட்களில் மறைந்துவிடும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த நெருக்கடி பயங்கரமானது, உலகளாவியது, எல்லா பக்கமும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு மத்தியிலும், இந்த பிரச்சினைகளில் இருந்தெல்லாம் நாடு பாதிக்காமல் பாதுகாப்பதற்காக அரசு புதிய முயற்சிகளை எடுக்கிறது, இடர்ப்பாடுகளைக்கூட சந்திக்கிறது. இது சவாலான பணிதான். ஆனால் உங்கள் ஆசிகளுடன், இதுவரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.
அரசின் பல்வேறு துறைகளின் செயல்திறன் பல மடங்கு பெருகி உள்ளது. இந்தியா 10-வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையில் இருந்து கடந்த 8 ஆண்டுகளில் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
மைல்கல்
கொரோனா தொற்று காலத்தில் வழங்கிய ரூ.3 லட்சம் கோடி நிதியானது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் 1½ கோடி பேருக்கு வேலைகளில் ஏற்பட்ட நெருக்கடியை தவிர்க்க உதவியது.
இளைஞர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக பல்வேறு முனைகளில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ரோஸ்கர் மேளா ஒரு மைல் கல் ஆகும்.
விவசாயம், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை மற்றம் பிற துறைகளுக்கு ஊக்கம் அளிப்பதற்கு அரசு செயலாற்றி வருகிறது. திறன் இந்தியா திட்டத்தின்கீழ் 1¼ கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் சுய வேலைவாய்ப்பு திட்டம் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் முதல் முறையாக காதி, கிராம தொழில் கமிஷன் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இந்த துறையில் 4 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்
புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்) இளைஞர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் 7 கோடி பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கி உள்ளது.
21-ம் நூற்றாண்டில் நாட்டின் லட்சியத்திட்டமாக 'மேக் இன் இந்தியா' என்னும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டமும், தற்சார்பு இந்தியா திட்டமும் அமைந்துள்ளது. பல துறைகளிலும் இறக்குமதியாளர் என்ற நிலையில் இருந்து நாடு ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு நகர்ந்துள்ளது. பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ள உற்பத்தி மற்றும் சுற்றுலா துறைகளில் அரசு விரிவாக உழைத்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தி உள்ளது.
ஆகஸ்டு மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 17 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். நாட்டின் முறைசார் பொருளாதாரத்தின் அங்கமாகி உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் 18-25 வயது பிரிவினர் ஆவார்கள்.
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.
பொன்னான வாய்ப்பு
நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.100 லட்சம் கோடியை செலவு செய்ய நாடு இலக்கு வைத்துள்ளது.
இன்றைக்கு புதிதாக பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் தங்கள் கடமையை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் நீங்கள் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். அரசு வேலை என்பது மக்களுக்கு பணியாற்றுவதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.