ஜி20 மாநாடு: காவல் ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு
|மாரடைப்பால் தாய் சிகிச்சையில் இருந்த போதும் பணியாற்றிய காவல் ஆய்வாளருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 9 மற்றும் 10ஆம் தேதிகளில், ஜி20 உச்சி மாநாடு புதுடெல்லியில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. உலக நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையில், இந்தியாவின் தனிச்சிறப்பும், தலைமைத்துவமும் இந்த ஜி20 மாநாடு வாயிலாக நிரூபிக்கப்பட்டது. இந்த மாநாடு குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டின.
ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்து, உலக நாடுகள் மத்தியில் தனது தலைமைப் பண்பை நிரூபித்துக் காட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வாரணாசியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக முடிப்பதற்கு உழைத்த ஊழியர்களின் கருத்துக்களை மோடி கேட்டறிந்தார்.
இந்நிலையில் ஜி20 மாநாட்டின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் டெல்லி போலீஸ். பாரத மண்டபத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தனது தாயார் மாரடைப்புக்கு ஆளானதை அறிந்தார். இருந்தபோதும் அவர் விவிஐபி பணியில் இருந்து தாய் இந்தியாவுக்கு சேவை செய்தார். பாரத மாதாவுக்கு அவர் செய்த சேவைக்கு நன்றி" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.