"மோடி என்பவர் பொய்களுக்கு அதிபதி" - சரமாரியாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே
|மத்திய அரசின் கொள்கைகளால் நாட்டில் யாரும் பயனடையவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பாட்னா,
பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புவதில் அதிபதி என்றும், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் கொள்கைகளால் நாட்டில் யாரும் பயனடையவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேஜஸ்வி யாதவின் ஜன விஸ்வாஸ் யாத்திரையில் பங்கேற்று பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் மோடி நாட்டை சீரழித்து வருகிறார். மோடி 2 கோடி பேருக்கு வேலை கொடுத்தாரா..? மற்ற நாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை கொண்டு வருவேன் என்று மோடி உறுதியளித்தார். மேலும், 2022ம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகவும் உறுதியளித்தார்.
இதையெல்லாம் மோடி நிறைவேற்றினாரா..? இவை அனைத்தும் பொய்கள் அதாவது மோடிஜி ஜுடோன் கா சர்தார் (பொய்களின் அதிபதி). கடந்த 10 ஆண்டுகளில் அவரது திட்டங்களால் யாரும் பயனடையவில்லை.
தேஜஸ்வி யாதவ் தனது பதவிக்காலத்தில் வேலை தருவதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார். இந்தியா பிளாக் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது. பா.ஜனதாவுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் எங்களுக்கு உதவுங்கள். ஜனநாயகத்தையும் அதன் அரசியலமைப்பையும் காப்பாற்றுவது உங்கள் கடமை" என்று அவர் கூறினார்.