பீகாரில் ரூ.34,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
|எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ரூ.1.48 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பாட்னா,
பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி பீகார் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது பீகார் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதன்படி அவுரங்காபாத்தில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.21,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பெகுசராய் பகுதிக்கு பயணம் செய்யும் பிரதமர், அங்கு ரூ.13,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மொத்தமாக பீகாரில் ரூ.34,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது தவிர எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் பல்வேறு மாநிலங்களில் சுமார் 1.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.