< Back
தேசிய செய்திகள்
அயோத்தி விமான நிலையம்.. ரூ.15,700 கோடியில் திட்டப்பணிகள்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
தேசிய செய்திகள்

அயோத்தி விமான நிலையம்.. ரூ.15,700 கோடியில் திட்டப்பணிகள்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

தினத்தந்தி
|
30 Dec 2023 2:51 PM IST

ராமர் கோவிலுக்கு செல்லும் 4 பாதைகள் அகலப்படுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன.

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. அயோத்தி ரெயில் நிலையமும் ரூ.240 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து அயோத்திக்கு விமானம் மூலம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக, புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையத்துக்கு சென்ற அவர், புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், புதிய ரெயில் சேவைகளையும் துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அயோத்தி விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடி, விமான நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் விமான நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். அப்போது, அயோத்தி நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கான ரூ.11,100 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளையும், பிற மாவட்டங்களுக்கான ரூ.4,600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

ராமர் கோவிலுக்கு செல்லும் 4 பாதைகள் அகலப்படுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன. ராம பாதை, பக்தி பாதை, தர்ம பாதை, ராமஜென்மபூமி பாதை என்ற 4 பாதைகளையும் திறந்து வைத்தார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்