பிரதமர் மோடி இன்று ஜம்மு பயணம் - ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
|ஜம்முவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று ஜம்மு செல்கிறார். காலை 11:30 மணியளவில் ஜம்முவில் மவுலானா ஆசாத் ஸ்டேடியத்திற்கு வருகை தரும் அவர், ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி, நாட்டுக்கு அவற்றை அர்ப்பணிக்க உள்ளார். அதன்படி ஜம்முவின் விஜய்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, செனாப் ரெயில்வே பாலம், தேவிகா நதிநீர் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார். நிறைவு பெற்ற சாலை, ரெயில் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின்போது, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்குகிறார். "விக்சித் பாரத் விக்சித் ஜம்மு" என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் உரையாற்றுவார் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதன்பிறகு ஜம்முவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மேலும், ஜம்மு ஐ.ஐ.எம்., புத்தகயா ஐ.ஐ.எம். மற்றும் விசாகப்பட்டினம் ஐ.ஐ.எம். ஆகிய 3 ஐ.ஐ.எம்.களுக்கான புதிய வளாகங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாக்களுக்கு 20 புதிய கட்டிடங்கள் மற்றும் நவோதலயா வித்யாலயாக்களுக்கு 13 புதிய கட்டிடங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. ஐ.ஐ.டி. பிலாய், ஐ.ஐ.டி. திருப்பதி, ஐ.ஐ.டி. ஜம்மு, ஐ.ஐ.ஐ.டி.டி.எம். கர்னூல் மற்றும் கான்பூரில் உள்ள ஐ.ஐ.எஸ். ஆகியவற்றுக்கான நிரந்தர வளாகங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதுதவிர, உத்தரகாண்டின் தேவபிரயாக் மற்றும் திரிபுராவின் அகர்தலாவில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கான 2 வளாகங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த அனைத்து கல்வி திட்டங்களுக்கான மொத்த மதிப்பு ரூ.13,375 கோடி ஆகும்.