< Back
தேசிய செய்திகள்
60 ஆண்டுகளில் முடியாததை பிரதமர் மோடி 8 ஆண்டுகளில் சாதித்து விட்டார் - மத்திய மந்திரி அனுராக் தாகூர்
தேசிய செய்திகள்

60 ஆண்டுகளில் முடியாததை பிரதமர் மோடி 8 ஆண்டுகளில் சாதித்து விட்டார் - மத்திய மந்திரி அனுராக் தாகூர்

தினத்தந்தி
|
26 Aug 2023 9:59 PM IST

சந்திரயான்-3 விண்கலம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டியுள்ள மத்திய மந்திரி அனுராக் தாகூர், இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் முடியாததை பிரதமர் மோடி 8 ஆண்டுகளில் சாதித்து விட்டதாக பாராட்டி உள்ளார்.

புத்தக வெளியீட்டு விழா

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கல திட்டம் வெற்றியடைந்து இருக்கிறது. இந்த வரலாற்று சாதனை, உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த திட்ட வெற்றி மற்றும் பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்காக பிரதமர் மோடியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் பாராட்டி உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நடந்த, பிரதமர் மோடியின் உரைகள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனுராக் தாகூர், அதில் உரையாற்றும்போது இது தொடர்பாக கூறியதாவது:-

பெருமையான தருணம்

நிலவின் தென்துருவத்தில் நாம்தான் முதன்முதலில் விண்கலத்தை தரையிறக்கி சாதித்து இருக்கிறோம். நமக்கு இது ஒரு பெருமையான தருணம். இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் செய்ய முடியாததை பிரதமர் மோடி வெறும் 8 ஆண்டுகளில் சாதித்து விட்டார்.

நாடு முழுவதும் 4 கோடி ஏழைகள் வீடுகள் பெற்று இருக்கிறார்கள். 12 கோடி பெண்களும், அவர்களது குடும்பமும் கழிவறை வசதி பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் சென்றடைந்து உள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் 2½ ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் 80 கோடி பேர் இரட்டை ரேஷன் பெற்று உள்ளனர். தற்போது 12 கோடி பேருக்கு வெறும் 3 ஆண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 60 கோடி மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கும் பணியை கடந்த 9 ஆண்டுகளில் மோடிஜி செய்துள்ளார்.

இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்