பிரதமர் மோடி ஜெர்மனி புறப்பட்டு சென்றார் - 'ஜி-7' உச்சி மாநாட்டில் பங்கேற்பு
|3 நாள் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி ஜெர்மனி புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறுகிற ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார்.
புதுடெல்லி,
ஜெர்மனி நாட்டில், ஸ்குலோஸ் எல்மாவ் என்ற இடத்தில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் நேரில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைத்துள்ளார்.
இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்று 'ஜி-7' உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில் 'ஜி-7' உறுப்பு நாடுகளும், நட்பு நாடுகளும் கலந்துகொள்கின்றன.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி 26, 27 ஆகிய இரு நாட்கள் (இன்றும், நாளையும்) கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டின் இடையே அவர் 12 நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளார்.
உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு அவர் நாளைமறுதினம் (28-ந்தேதி) ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ஜாயெத் அல் நஹ்யானை சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு நாளைமறுதினம் இரவு அவர் டெல்லிக்கு புறப்படுகிறார்.
இதற்காக பிரதமர் மோடி நேற்று ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் தனது வெளிநாட்டு பயணம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நான் ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பின்பேரில், அந்த நாட்டின் ஸ்குலோஸ் எல்மாவ் நகருக்கு செல்கிறேன். கடந்த மாதம் நடந்த பயனுள்ள இந்திய ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான கலந்துரையாடலுக்கு பிறகு, பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ்சை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகும்.
மனித குலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான உலகளாவிய விஷயங்களில், சர்வதேச ஒத்துழைப்பு வலுப்படுத்தும் முயற்சியில், 'ஜி-7' உச்சி மாநாட்டுக்கு பிற ஜனநாயக நாடுகளான அர்ஜெண்டினா, இந்தோனேசியா, செனகல், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை ஜெர்மனி அழைத்துள்ளது.
தலைவர்களுடன் சந்திப்பு
இந்த உச்சி மாநாட்டின் அமர்வுகளின்போது, 'ஜி-7' நாடுகளுடனும், 'ஜி-7' நட்பு நாடுகளுடனும், விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள சர்வதேச அமைப்புகளுடனும், சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பயங்கரவாத தடுப்பு, பாலின சமத்துவம், ஜனநாயகம் போன்ற முக்கியமான விஷயங்களில் நான் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வேன். 'ஜி-7' உச்சி மாநாட்டின் இடையே, அதில் கலந்துகொள்ளும் தலைவர்களை சந்திக்க உள்ளேன்.
ஜெர்மனியில் இருக்கிறபோது, ஐரோப்பாவெங்கும் உள்ள இந்திய சமூகத்தின் உறுப்பினர்களை சந்திப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன். இவர்கள் தாங்கள் இருக்கிற நாடுகளின் பொருளாதாரத்தில் மகத்தான பங்களிப்பு செய்து கொண்டு, ஐரோப்பிய நாடுகளுடனான நமது உறவுகளை செழுமைப்படுத்தி வருகிறார்கள்.
நான் இந்தியா திரும்பி வருகிற வழியில், அபுதாபியில் இறங்குவேன். அங்கு நான் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ஜாயெத் அல் நஹ்யானை சந்திக்க உள்ளேன். இந்த சந்திப்பு 28-ந்தேதி நடக்கிறது. அப்போது, மறைந்த முன்னாள் அதிபர் ஷேக் கலிபாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பேன்.
இவ்வாறு பிரதமர் மோடி அதில் கூறி உள்ளார்.