'மணிப்பூர் விவகாரம் பற்றி பேச பிரதமர் மோடி விரும்பவில்லை' - மல்லிகார்ஜுன கார்கே
|கடந்த 11 நாட்களாக மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க காத்திருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ந்தேதி தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் நாடாளுமன்றம் இன்று வரை முடங்கியுள்ளது. இதனிடையே மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"அரசு எங்களை நாடாளுமன்றத்தில் பேச விடாததால் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறோம். பிரதமர் மற்ற விஷயங்களை பற்றி விவாதிக்கிறார், ஆனால் அவர் எங்களுக்கு பதிலளிக்கவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து பேச பிரதமர் மோடி விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் இது குறித்து விவாதிக்க தயாராக இல்லை என்பது போல குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆனால் நாங்கள் கடந்த 11 நாட்களாக இந்த விவகாரம் குறித்து விவாதிக்க காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.