பொதுக்கூட்டத்துக்கு தாமதமாக வந்ததால் மேடையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி
|ராஜஸ்தான் பொதுக்கூட்டத்துக்கு தாமதமாக வந்ததால் மேடையில் மண்டியிட்டு பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார்.
பிரமாண்ட பொதுக்கூட்டம்
பிரதமர் மோடி குஜராத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த அவர், நேற்று முன்தினம் ராஜஸ்தானுக்கு சென்றார்.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்குள்ள சிரோகி மாவட்டத்தின் அபு சாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அண்டை மாவட்டங்களை சேர்ந்த 40 சட்டசபை தொகுதிகளில் இருந்து ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் வந்திருந்தனர்.
10 மணி கடந்தது
ஆனால் பிரதமர் மோடி குஜராத் பயணம் முடித்துக் கொண்டு ராஜஸ்தான் செல்வதற்கு தாமதமாகி விட்டது. இதனால் இரவு 10 மணிக்கு பின்னரே பொதுக்கூட்ட மேடையை அடைந்தார்.
ஆனால் 10 மணிக்கு பிறகு மைக் மற்றும் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், அவரால் மைக்கில் பேச முடியவில்லை.
இதனால் மைக் இல்லாமல் சில நிமிடங்கள் பேசிய அவர், தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மீண்டும் வருவேன்
நான் வந்து சேர்வதற்கு தாமதமாகி விட்டது. தற்போது 10 மணி ஆகி விட்டது. ஒலிப்பெருக்கி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று என் மனசாட்சி கூறுகிறது.
இதனால் என்னால் இங்கு உரையாற்ற முடியவில்லை. எனவே நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால் இங்கு மீண்டும் வருவேன். இங்கு நீங்கள் வழங்கிய அன்பையும், பாசத்தையும் அப்போது வட்டியுடன் திரும்ப தருவேன் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
3 முறை மன்னிப்பு கோரினார்
பின்னர் அந்த மேடையிலேயே மண்டியிட்டு கூட்டத்தினரிடம் 3 முறை மன்னிப்பு கோரினார். அத்துடன் 'பாரத் மாதா கீ ஜே' என்ற கோஷத்தையும் கூறினார்.
அவரது செயலை சற்றும் எதிர்பாராத கூட்டத்தினர் மிகவும் நெகிழ்ந்தனர். மேலும் கைகளை தட்டியவாறே 'பாரத் மாதா கீ ஜே' கோஷத்தை திரும்ப கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர்.