< Back
தேசிய செய்திகள்
2-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ஷபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தேசிய செய்திகள்

2-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ஷபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தினத்தந்தி
|
5 March 2024 12:35 PM IST

பாகிஸ்தானின் 77 ஆண்டு கால வரலாற்றில் ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டின் 24-வது பிரதமர் ஆவார்.

புதுடெல்லி,

பாகிஸ்தானில் கடும் பதற்றத்துக்கு மத்தியில் கடந்த 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தான் தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களை கைப்பற்றினர்.

அதேபோல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களை கைப்பற்றியது. எனினும் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முடிவு செய்தது. ஆனால் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷபாஸ் ஷெரீப் (வயது 72) பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

எனவே பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 336 எம்.பி.க்களில் ஷபாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக 201 பேர் வாக்களித்தனர்.

இந்தநிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் ஷபாஸ் ஷெரீப் நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். அவருக்கு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் அவர் 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். பாகிஸ்தானின் 77 ஆண்டு கால வரலாற்றில் ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டின் 24-வது பிரதமர் ஆவார்.

இந்தநிலையில், 2-வது முறையாக பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில்,

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள ஷபாஸ் ஷெரீப்புக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

இம்ரான்கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு 2022 ஏப்ரல் முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு வரை ஷபாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்