இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
|இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 20-ந்தேதி நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டாா். அதனை தொடர்ந்து, வெளியுறவு மந்திரியாக இருந்து வந்த தினேஷ் குணவர்த்தனேவை இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமித்தார்.
இந்த நிலையில் இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி, தினேஷ் குணவர்த்தனேவுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் நம்பகமான நண்பராகவும், நெருங்கிய அண்டை நாடாகவும், இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். மேலும் இலங்கை விரைவான பொருளாதார மீட்சியை கண்டு, அதன் மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது.