கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
|கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 137 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.
இந்நிலையில் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க. செயல்பாட்டாளர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.