மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிம் பதவியேற்பு : பிரதமர் மோடி வாழ்த்து
|மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற அன்வர் இப்ராகிமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மலேசியப் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், சீர்திருத்தவாத தலைவர் அன்வார் இப்ராகிமை, புதிய பிரதமராக மலேஷிய மன்னர் நியமித்ததை அடுத்து, இன்று மாலை நடைபெற்ற விழாவில் அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற அன்வர் இப்ராகிமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மலேசியாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். இந்தியா-மலேசியா மேம்படுத்தப்பட்ட மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மலேசியாவில் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான 15- வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. 75 வயதான முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி, சனிக்கிழமை நடந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களில் 82 இடங்களை வென்றது. இந்தத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக மலாய் இனத்தைச் சார்ந்த முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 72 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த நிலையில், ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு, அன்வார் தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டதன் மூலம் நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது. மலேசியாவின் 10வது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்றார்.