< Back
தேசிய செய்திகள்
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
தேசிய செய்திகள்

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தினத்தந்தி
|
23 Feb 2024 11:25 AM IST

உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோகர் ஜோஷி இன்று காலமானார்.

புதுடெல்லி,

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86. கடந்த புதன்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக பி.டி.இந்துஜா மருத்துவமனையில் மனோகர் ஜோஷி அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நலம் மோசமடைந்து இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் மனோகர் ஜோஷி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மனோகர் ஜோஷியின் மறைவு வேதனை அளிக்கிறது. மூத்த தலைவரான அவர், பல ஆண்டுகளாக பொது சேவையில் இருந்தார். மேலும், நகராட்சி, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

மராட்டிய முதல்-மந்திரியாக இருந்த அவர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார். மத்திய மந்திரியாகவும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். மக்களவை சபாநாயகராக அவர் பதவி வகித்த காலத்தில், நமது நாடாளுமன்ற செயல்முறைகளை மேலும் துடிப்பு மிக்கதாக மாற்ற பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி" என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்