புதிய சவால்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி
|பிரதமர் மோடி, நாட்டின் புதிய மற்றும் அதிகரிக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள முப்படையினரும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
முப்படைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் 3 நாள் மாநாடு போபாலில் நடந்தது. இதன் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டு, நாட்டின் பாதுகாப்பு சவால்கள் மற்றும் படைகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார். அப்போது நாட்டின் பாதுகாப்பு சூழல்கள், எல்லைகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு விளக்கினர்.
இதில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் புதிய மற்றும் அதிகரிக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள முப்படையினரும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் நாட்டின் கட்டமைப்பில் வழங்கி வரும் பங்களிப்பு மற்றும் பேரிடரில் உதவிக்கரம் நீட்டி வரும் முப்படையினரை பிரதமர் மோடி பாராட்டினார்.
இந்த மாநாட்டில் நாட்டின் பாதுகாப்பில் தற்சார்பு நிலை, சைபர் பாதுகாப்பு, சமூக ஊடக தாக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.