< Back
தேசிய செய்திகள்
பேரிடர்களின்போது ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் - பிரதமர் மோடி கருத்து

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பேரிடர்களின்போது ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் - பிரதமர் மோடி கருத்து

தினத்தந்தி
|
5 April 2023 4:01 AM IST

பேரிடர்கள் ஏற்படும்போது ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பேரிடரை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்பு தொடர்பான 5-வது சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியின் வீடியோ உரை ஒளிபரப்பப்பட்டது.

அதில் பிரதமர் மோடி பேசியிருப்பதாவது:-

கடந்த சில ஆண்டுகளில், பேரிடரை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் 40 நாடுகள் இணைந்துள்ளன. இந்த கருத்தரங்கம், முன்னேறிய, வளரும் நாடுகளுக்கும், பெரிய, சிறிய நாடுகளுக்கும் முக்கியமான தளமாக மாறி இருக்கிறது.

உள்கட்டமைப்பு என்பது யாரையும் பின்தங்க விடக்கூடாது. சிக்கலான தருணங்களிலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு குறித்து முழுமையான பார்வை வேண்டும்.

ஒருங்கிணைந்த அணுகுமுறை

போக்குவரத்து உள்கட்டமைப்பை போலவே சமூக, மின்னணு உள்கட்டமைப்பும் முக்கியமானது. இந்தியா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலை, துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் போன்ற சமீபகால பேரிடர்கள், உலகம் சந்திக்க வேண்டிய சவால்களை நினைவுபடுத்துகின்றன.

பேரிடர்கள் என்பது ஒரு பிராந்தியத்துடன் நின்று விடுவதில்லை. உலகம் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதால், ஒரு பிராந்தியத்தில் நடக்கும் பேரிடர், முற்றிலும் மாறுபட்ட வேறு பிராந்தியத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, பேரிடர்கள் ஏற்படும்போது ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்.

பாடம் கற்க வேண்டும்

வேகமாக நிவாரண பணிகளில் ஈடுபடுவதுடன், விரைவாக இயல்புநிலையை கொண்டுவருவது முக்கியம். ஒரு பேரிடருக்கும், இன்னொரு பேரிடருக்கும் இடையே உள்கட்டமைப்பு நிறுவப்படுகிறது.

கடந்த கால பேரிடர்களை ஆய்வு செய்து, அவற்றில் இருந்து பாடம் கற்பதுதான் சிறந்த வழி. பேரிடர்களை தாங்கக்கூடிய உள்கட்டமைப்புகளை உள்ளூர் ஞானத்துடன் உருவாக்க வேண்டும். ஜி20 அமைப்பு தலைமை பொறுப்பை ஏற்றதன் மூலம் உலகத்தை இந்தியா ஒன்றுபடுத்தி வருகிறது என்று அவர் பேசினார்.

மேலும் செய்திகள்