இந்தூரில் கோவில் படிக்கட்டு கிணறு இடிந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு
|இந்தூரில் கோவில் படிக்கட்டு கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் வியாழக்கிழமை ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. கோவில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது கிணற்றின் மேற்கூரை எதிர்பாரத விதமாக திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து படிக்கட்டு கிணற்றில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர்.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில் 19 பேரை மீட்புபடையினர் உயிருடன் மீட்டனர். ராம நவமியை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டின் போது விபத்து நேரிட்டது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்தூரில் இன்று துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்தியப் பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.