பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
|தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
புதுடெல்லி,
தென் ஆப்பிரிக்க அதிபர் மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார்.
நடப்பு ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் 30-வது ஆண்டு நிறைவடையும் நிலையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
வரும் 22 முதல் 24-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்கா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தென் ஆப்பிரிக்க அதிபர் ராமபோசா, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு தென் ஆப்பிரிக்க அதிபர் விளக்கினார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோகன்னஸ்பர்க் நகருக்குப் பயணிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவின் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்த தென் ஆப்பிரிக்க அதிபர் ராமபோசா, ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வருகை தர ஆவலாக இருப்பதாகக் கூறினார்.
நடப்பாண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பிரிக்ஸ் மாநாடு காணொலி காட்சி வாயிலாகவே நடைபெற்று வந்த நிலையில், நடப்பாண்டில் நேரடியாக நடைபெறவுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் முதல் முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.