புதிய தேர்தல் ஆணையர் யார்? - பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடுகிறது
|புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடுகிறது.
புதுடெல்லி,
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் முதல் 3 பதவிகள் மிகவும் முக்கியமானவையாகும். தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் பதவிகள் முக்கியமானவை.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் செயல்பட்டு வருகிறார். தேர்தல் ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையத்தின் அனைத்து அதிகாரிகளும் மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. புதிய சட்ட திருத்தத்தின்படி, புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க மத்திய சட்ட மந்திரி தலைமையில் 2 மத்திய செயலாளர்களை உள்ளடக்கிய தேடுதல் குழு அமைக்கப்படும். அந்த குழு புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க 5 பேரின் பெயர்களை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவில் மத்திய மந்திரி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என மொத்தம் 3 பேர் இடம்பெறுவர். தேடுதல் குழு அனுப்பி வைக்கும் பரிந்துரையான 5 பேரில் ஒருவரை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்து ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கு அனுப்பி வைக்கும். தேர்வுக்குழு அனுப்பி வைக்கும் பரிந்துரையை ஏற்று அந்த நபரை தேர்தல் அதிகாரியாக ஜனாதிபதி நியமிப்பார்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டேவின் பதவிகாலம் வரும் 14ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, மத்திய சட்ட மந்திரி தலைமையில் 2 மத்திய செயலாளர்களை உள்ளடக்கிய தேடுதல் குழு ஏற்கனவே புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க 5 பேரின் பெயர்களை பரிந்துரையாக அனுப்பி வைத்துள்ளது.
இந்த 5 பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதிரி உள்பட 3 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த குழு பரிந்துரைக்கும் நபரை இந்திய தேர்தல் ஆணையராக ஜனாதிபதி நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் புதிய தேர்தல் ஆணையராக யார் நியமிக்கப்பட உள்ளார் என்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.