< Back
தேசிய செய்திகள்
லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் சில ஆயிரம் இளைஞர்களுக்கே வேலை வழங்குவதா? பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜூன கார்கே தாக்கு
தேசிய செய்திகள்

லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் சில ஆயிரம் இளைஞர்களுக்கே வேலை வழங்குவதா? பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜூன கார்கே தாக்கு

தினத்தந்தி
|
6 Nov 2022 2:05 AM IST

நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடிக் கொண்டிருக்க பிரதமர் மோடி சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் மேளாவை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.

ஆனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்க, சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

பொய்யான வாக்குறுதிகள்

இந்தியாவின் கிராமப்புற பகுதிகள் வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருகின்றன. கிராமப்புற வேலையில்லா திண்டாட்டம் கடந்த 6 ஆண்டுகளாக 7.02 சதவீதமாக உள்ளது.

ஒரு வேலைக்காக நமது இளைஞர்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பா.ஜனதாவின் விருப்பமின்மையும், பொய்யான வாக்குறுதிகளுமே இதற்கு காரணம் ஆகும்.

ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க தவறிவிட்டார். மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் காலியிடங்கள் இருப்பது குறித்து நினைத்து பார்க்கவே பா.ஜனதா அரசுக்கு 8 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

அக்னிபாத் திட்டம்

ரோஜ்கார் மேளாவை நடத்தி வரும் பிரதமர் மோடி டெல்லியில் 75 ஆயிரம் நியமன கடிதங்களை வழங்கி உள்ளார். குஜராத்தில் 13 ஆயிரம், காஷ்மீரில் 3 ஆயிரம் பேருக்கு பணிகளை வழங்கி இருக்கிறார்.

இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடிக்கொண்டிருக்க, சில ஆயிரம் பேருக்கு மட்டுமே நியமன கடிதங்களை பிரதமர் வழங்கி உள்ளார்.

அக்னிபாத் திட்டத்தில் 40 ஆயிரம் பணியிடங்களுக்கு 35 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. உத்தரபிரதேசத்தில் சில ஆயிரம் பணியிடங்களுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். முதுகலை பட்டதாரிகள், பி.எச்.டி. பட்டம் பெற்றவர்கள் கூட தங்கள் கல்வித்தகுதிக்கு மிகவும் குறைவான இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

ஏராளமான காலியிடங்கள்

ஆயுதப்படைகள், மத்திய போலீஸ் படைகள், மத்திய அரசு பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், போலீஸ், கோர்ட்டுகளில் லட்சக்கணக்கான காலியிடங்கள் உள்ளன.

நாட்டின் பாதுகாப்பில் மத்திய ஆயுதப்படைகள் முக்கிய தூணாக உள்ளன. அவற்றில் தற்போது 2 லட்சத்துக்கு அதிகமான காலியிடங்கள் இருப்பது கவலைக்குரியது.

இதைப்போல பிற துறைகளிலும் காலியாக கிடக்கும் லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு மோடி அரசிடம் இருக்கும் திட்டம் என்ன?

16 கோடி வேலைகள் எங்கே?

இளைஞர்களுக்காக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மோடி அரசு தோல்வியடைந்து விட்டது. 'மேக் இன் இந்தியா', திறன் இந்தியா போன்றவற்றை இனியும் கேட்க நாங்கள் தயாரில்லை.

இந்த திட்டங்கள் மற்றும் கோஷங்களால் என்ன நன்மை விளைந்துள்ளது? நீங்கள் வாக்களித்த 16 கோடி வேலைகள் எங்கே? மோடிஜி, நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்