காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் நரேந்திர மோடி மரியாதை
|நாட்டின் பிரதமராக 3-வது முறையாக இன்று மாலை பதவியேற்கிறார் நரேந்திர மோடி.
புதுடெல்லி,
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளும் அரசை தேர்வு செய்ய கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் கடந்த 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியாகின.
இதில் கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 543 தொகுதிகளில் 240 இடங்களையே அந்த கட்சி பெற்றது.அதேநேரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. அத்துடன் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த கூட்டணி தொடங்கியது.
பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க இந்த கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை அந்த கட்சிகள் தேர்வு செய்தன.இதைத்தொடர்ந்து பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கூட்டணியின் நாடாளுமன்றக்குழு தலைவராக (பிரதமர்) மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான தீர்மானத்தை பா.ஜனதா மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். அதை அமித்ஷா, நிதின் கட்காரி மற்றும் கூட்டணி தலைவர்கள் வழிமொழிந்தனர். அத்துடன் மோடிக்கு ஆளுயர மாலையும் அணிவித்து அவரை புதிய பிரதமராக அங்கீகரித்தனர்.
பின்னர் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கினர்.மேலும் பிரதமர் மோடியை ஆதரிக்கும் எம்.பி.க்களின் கையெழுத்து போட்ட கடிதங்களையும், ஜனாதிபதியிடம் அவர்கள் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மாலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று திரவுபதி முர்முவை சந்தித்தார். அத்துடன் ஆட்சியமைப்பதற்கான உரிமையும் கோரினார்.
இதை ஏற்று பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.அத்துடன் ஜனாதிபதி மாளிகையில் நாளை (இன்று) இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டது.முன்னதாக புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் தொடங்கி இருந்தன. ஜனாதிபதி மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டு வந்தன.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பல்வேறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில், யார் யாருக்கெல்லாம் மத்திய மந்திரி பதவி வழங்குவது என்ற ஆலோசனையும் நடந்து வந்தது. குறிப்பாக பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த துறைகளை வழங்குவது என்று நீண்ட ஆலோசனை நடந்து வந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு நடைபெறும் வண்ணமயமான நிகழ்வில், நாட்டின் புதிய பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார்.நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்கும் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
அவரை தொடர்ந்து பல்வேறு மத்திய மந்திரிகளும் பதவியேற்கிறார்கள். அவர்களுக்கும் ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.தற்போதைய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, முன்னாள் முதல்-மந்திரிகள் சிவராஜ் சிங் சவுகான், பசவராஜ் பொம்மை, மனோகர்லால் கட்டார், சர்பானந்தா சோனாவால் ஆகியோருக்கு நிச்சயம் மந்திரி சபையில் இடம் வழங்கப்படும் என தெரிகிறது.
இதைப்போல கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் சிலரும் மத்திய மந்திரி சபையில் இடம்பிடிப்பார்கள் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெறும் பதவியேற்பு விழாவில் பல்வேறு அண்டை நாட்டு தலைவர்கள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரதமர் மோடியை நேரில் வாழ்த்துகிறார்கள்.இதற்காக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, செசல்ஸ் துணை அதிபர் அகமது அபிப் ஆகியோர் ஏற்கனவே டெல்லி வந்து விட்டனர்.
இதைப்போல நேபாள பிரதமர் பிரசந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, மொரீஷியஸ் அதிபர் பிரவிந்த் குமார் ஜெகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோபே ஆகிய 7 நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் சாகர் திட்டத்தின் அடிப்படையில் இந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களும், 2019-ம் ஆண்டு பதவியேற்றபோது பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகள் வாழ்த்து தெரிவித்து உள்ளன. இந்த விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்தநிலையில், 3-வது முறையாக நாட்டின் பிரதமராக இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி, சதைவ் அடல் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் நினைவிடங்களில் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து போர் வீரர்கள் நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தினார். நரேந்திர மோடியுடன் ராஜ்நாத் சிங் முப்படைகளைசேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.